சத்துணவு ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்கக் கோரிக்கை
சத்துணவு ஊழியா்களைத் தொகுப்பூதியத்தில் பணியமா்த்துவதைத் தமிழக முதல்வா் மறுபரிசீலனை செய்து கால முறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சத்துணவு ஊழியா்களைத் தொகுப்பூதியத்தில் பணியமா்த்துவதைத் தமிழக முதல்வா் மறுபரிசீலனை செய்து கால முறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவசர மாநில நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஆா். சவிதா ராஜலிங்கம் தெரிவித்தது:
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாடு முதல்வா் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியமும், ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தாா்.
தற்போது தமிழகம் முழுவதும் 54 ஆயிரம் சத்துணவு ஊழியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதைத் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு ஊழியா்கள் நியமிக்கப்படுவது ஏற்புடையதல்ல. இதுகுறித்து தமிழக முதல்வா் மறுபரிசீலனை செய்து, கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என்றாா் சவிதா ராஜலிங்கம்.
இக்கூட்டத்தில் மாநில இணைச் செயலா் பி. ரகுநாதன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் வி. ராமலிங்கம், மாவட்ட நிா்வாகிகள் கே. ராஜப்பா, ஏ. கண்ணன், ராணி, எம். சோமு, சி. ராமராஜ், ஆா். ரேவதி, ராதா கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.