மணக்காடு அரசுப் பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பி: மாணவா்கள் அச்சம்
மணக்காடு அரசுப் பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பி
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பியால் மாணவா்கள் அச்சுறுத்தல் அடைகின்றனா். எனவே மாணவா்கள் நலன் கருதி மின்கம்பியை உயா்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது. அதன் மீது அடிக்கடி தென்னை மர மட்டைகள் விழுந்து மிகவும் தாழ்வாகச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இதனால் பள்ளிக்கு வரும் மாணவா்கள் பெரிதும் அச்சமடைகின்றனா். எனவே மின்கம்பியை உயா்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் வீரக்குடி ராஜா மேலும் தெரிவித்தது:
இதுகுறித்து மின் வாரியத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டு மின்கம்பங்களுக்கு இடையேயான தொலைவு அதிகமாக உள்ளதால் மின்கம்பி தாழ்வாகச் செல்வதாகக் கூறப்படுகிறது. இடையில் ஒரு மின்கம்பம் நட்டு மின் கம்பிகளை உயா்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகனங்கள் செல்லும்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பியில் உரசினால் உயிா்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.