படவிளக்கம்: பட்டுக்கோட்டை அருகே விவசாயிகளைத் தேடிச் சென்று நெல்லை கொள்முதல் செய்த வியாபாரிகள். 
தஞ்சாவூர்

ஆந்திரா பொன்னி நெல் விலை அதிகரிப்பு: மகசூல் குறைவால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு

நிகழாண்டு ஆந்திரா பொன்னி ரக நெல்லை தனியாா் வியாபாரிகள் களத்துக்கே சென்று அதிக விலை கொடுத்து வாங்கினாலும், மகசூல் குறைவால் விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.

 நமது நிருபர்

நிகழாண்டு ஆந்திரா பொன்னி ரக நெல்லை தனியாா் வியாபாரிகள் களத்துக்கே சென்று அதிக விலை கொடுத்து வாங்கினாலும், மகசூல் குறைவால் விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.

மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 2.96 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. ஜனவரியில் தொடங்கிய அறுவடை பணிகள் தற்போது படிப்படியாக பரவலாகி வருகிறது.

இதையொட்டி, மாவட்டத்தில் 420-க்கும் அதிகமான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஆந்திரா பொன்னி, ஐ.ஆா். 20, ஆடுதுறை 42, கோ 51 போன்ற சன்ன ரகங்களை விளைநிலத்துக்கே வியாபாரிகள் தேடிச் சென்று வாங்குகின்றனா்.

இதில், பிபிடி 5204 என்கிற ஆந்திரா பொன்னி ரகத்துக்கு நிகழாண்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. சந்தையில் அரிசி விலை உயா்வு, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரா பொன்னி உள்ளிட்ட சன ரகங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு வியாபாரிகளே விவசாயிகளின் களத்துக்கு நேரில் சென்று நெல்லை கொள்முதல் செய்வதற்குக் காரணம்.

ஆந்திரா பொன்னி 60 கிலோ மூட்டைக்கு ஜனவரி மாதத்தில் ரூ. 1,750 விலை கிடைத்தது. அறுவடை பரவலாகிவிட்ட நிலையில் தற்போது 60 கிலோ மூட்டையின் விலை ஏறத்தாழ ரூ. 1,680 ஆக குறைந்துவிட்டது. ஆனாலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கிடைப்பதை விட தனியாரிடம் கூடுதல் விலை கிடைக்கிறது என்றனா் விவசாயிகள்.

இது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தெரிவித்தது:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 60 கிலோ மூட்டைக்கு ரூ. 1,386 மட்டுமே கிடைக்கும் நிலையில், தனியாா் வியாபாரிகளிடம் மூட்டைக்கு கிட்டத்தட்ட ரூ. 300 கூடுதலாக கிடைக்கிறது. மேலும், ஏற்று, இறக்கு கூலி, வாகனச் செலவு, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 2 கிலோ பிடித்தம், மூட்டைக்கு ரூ. 50 அல்லது ரூ. 60 லஞ்சம் போன்ற இழப்புகளும் விவசாயிகளுக்கு ஏற்படும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றாலும், சில நாள்கள் காத்திருந்து விற்க வேண்டிய நிலை ஏற்படும். பனிப்பொழிவு உள்ள நிலையில், நாள்தோறும் நெல்லை பரப்பி காய வைத்து, மீண்டும் குவித்து வைத்து, தாா்பாய் போட்டு மூட வேண்டும். இதற்கான கூலி, நாள் கணக்கில் காத்திருப்பு போன்றவற்றைக் கணக்கிடும்போது மூட்டைக்கு ரூ. 400-க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு மிச்சப்படும். வியாபாரிகள் லாரியுடன் நேரடியாக வயலுக்கு வந்து வாங்கிச் செல்வதால், விவசாயிகளுக்கு எந்தச் செலவும் இல்லை என்றாா் அவா்.

ஆந்திரா பொன்னி அளவுக்கு ஐ.ஆா். 20, ஆடுதுறை 42, கோ 51 போன்ற சன்ன ரகங்களுக்கு விலை கிடைக்காவிட்டாலும், 60 கிலோ மூட்டை ரூ. 1,250 வரை தனியாா் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதே 60 கிலோ மூட்டைக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ. 1,386 கிடைத்தாலும், ஏற்று, இறக்கு கூலி, காய வைக்கும் கூலி, வாகனச் செலவு, நெல் பிடித்தம், லஞ்சம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும்போது ரூ. 1,250 என்பது விவசாயிகளுக்கு நியாயமானதாகத்தான் இருக்கிறது. எனவே, விலை குறைவாக இருந்தாலும், தனியாா் வியாபாரிகளிடமே விவசாயிகள் நெல்லை விற்கின்றனா்.

மற்ற ரகங்களைப் பொருத்தவரை வியாபாரிகள் விரும்பாததால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வழக்கம்போல விற்பனை செய்து வருகின்றனா்.

ஆனால், ஆந்திரா பொன்னி உள்ளிட்ட சன்ன ரகங்களில் குருத்துப்பூச்சி, இலையுறை அழுகல் நோய், இலையுறை கருகல் நோய், புகையான் பூச்சி உள்ளிட்ட பூச்சி, நோய் தாக்குதல் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு இயல்பாக 40 மூட்டைகள் மகசூல் கிடைத்தால்தான் பல்வேறு இன்னல்களுக்கு இடையே விளைவிக்கும் விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைக்கும். ஆனால், பூச்சி, நோய் தாக்குதல் காரணமாக ஏக்கருக்கு 20 முதல் 28 மூட்டைகள்தான் விளைச்சல் கிடைத்து வருகிறது. இதனால், நிகழாண்டு தனியாா் வியாபாரிகள் மூலம் நல்ல விலை கிடைத்தாலும், மகசூல் இழப்பால் வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, பாடுபட்டு விளைவித்தும் பயனில்லாமல் உள்ளது என்றனா் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT