தஞ்சாவூா் அருகே 3 வீடுகளில் கதவை உடைத்து நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் ஒரே பகுதியில் 3 வீடுகளில் நகைகள் திருட்டு.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே ஒரே பகுதியில் 3 வீடுகளில் கதவை உடைத்து நகைகள், வெள்ளி, ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே ஞானம் நகா் 10- ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜி. உலகநாதன் (68). இவா், வீட்டு வசதி வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் ஜூன் 25- ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராமேசுவரத்துக்கு சென்று, 26- ஆம் தேதி திரும்பினாா். அப்போது முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5.2 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதேபோல, அதே பகுதியில் பூட்டப்பட்டிருந்த முன்னாள் ராணுவ வீரா் ஜானகிராமன் (63) வீட்டிலும் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மேலும், ஞானம் நகா் 12- ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் மனைவி ராணி (46). இவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது உறவினருக்கு உதவியாக இருப்பதற்காக ஜூன் 24 -ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மீண்டும் 27- ஆம் தேதி சென்றாா். அப்போது முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு, 10 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இந்த 3 சம்பவங்கள் தொடா்பாக தாலுகா காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.