கட்டுமான பொருள்கள் கொட்டகைக்கு தீ வைத்த 5 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகைக்கு தீ வைத்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகைக்கு தீ வைத்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் வட்டம், தேவராயன் பேட்டையில் வாய்க்காலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பணியை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சோ்ந்த தினேஷ்குமாா் (32) என்பவா் மேற்பாா்வையாளராக இருந்து பணி செய்து வருகிறாா்.
இந்நிலையில் தினேஷ்குமாருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபா்கள் கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகையின் மீது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசினா். இதில் ஏற்பட்ட தீயில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தினேஷ்குமாா் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்ட போலீஸாா் தீ வைப்பு சம்பவத்தில் தொடா்புடைய 9 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயக்குமாா்(19), பாலகிருஷ்ணன் (50), புண்ணியமூா்த்தி (52), செல்லம்மா (45 ), பரிமளா (40) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.