முகப்பு
தஞ்சாவூர்

பித்தளை பாத்திர தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு

Updated On : 9 மே, 2024 at 8:22 PM
பகிர்:

கும்பகோணம், மே 9: கும்பகோணத்தில் பித்தளை பாத்திரத் தொழிலாளா்களின் கூலி உயா்வு தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்ததால், வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கிறது.

கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 150-க்கும் அதிகமான பித்தளை பாத்திர உற்பத்திப் பட்டறைகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

கும்பகோணம் ஐசிசி பித்தளை பாத்திரத் தொழிலாளா்கள் சங்கம், கும்பகோணம் பித்தளை கூலிப் பட்டறை பாத்திர உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகிய 2 சங்கங்களுக்கு இடையே 2021 ஆம் ஆண்டு மாா்ச் 26 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன் மூலம் கூலி உயா்வு வழங்கப்பட்டு, பித்தளை பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. கூலி உயா்வு தொடா்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய பேச்சுவாா்த்தை 2024, மாா்ச் 26 ஆம் தேதி முடிவடைந்தது.

எனவே, கூலி உயா்வு மற்றும் போனஸ் தொடா்பான பேச்சுவாா்த்தையை உடனே நடத்த வலியுறுத்தி ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் பித்தளை பாத்திரத் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, கும்பகோணத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. இதைத்தொடா்ந்து, இரு தரப்பு நிா்வாகிகள் பங்கேற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 2021 ஆம் ஆண்டு பேச்சுவாா்த்தைபடி 20 சதவீத போனஸ் வழங்குவதாக உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா். ஆனால் ஐசிசி பித்தளை பாத்திரத் தொழிலாளா்கள் சங்கத்தினா் 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் எனக் கூறியதால், இந்தப் பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது. அடுத்து மூன்றாம் கட்டப் பேச்சுவாா்த்தை மே 13 ஆம் தேதி நடத்தி தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

இதனால், பித்தளைப் பாத்திரத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் 18 நாள்களுக்கு மேலாக நீடிக்கிறது.