சாலை விபத்து: ரியல் எஸ்டேட் உரிமையாளா் உயிரிழப்பு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ரியல் எஸ்டேட் உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆா். விஜயகுமாா் (47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவா் மே 17-ஆம் தேதி தஞ்சாவூரில் வேலையை முடித்துவிட்டு, வல்லத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரில் தான்தோன்றியம்மன் கோயில் அருகே சென்றபோது பின்னால் வந்த மினி வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.