தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடில் 75.4 மி.மீ. மழை பொழிவு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடு பகுதியில் 75.4 மி.மீ. மழை பெய்தது. இதனால் கோடை பருவ நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு வாரமாக ஆங்காங்கே பரவலாகவும், பலத்த மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல, ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): வெட்டிக்காடு 75.4, பூதலூா் 68.6, பட்டுக்கோட்டை 61, வல்லம் 57, ஈச்சன்விடுதி 48.2, குருங்களம் 41.4, அதிராம்பட்டினம் 35.5, திருவையாறு 35, மதுக்கூா் 33.4, அய்யம்பேட்டை 29, திருவிடைமருதூா் 20.4, மஞ்சளாறு 19.4, பாபநாசம் 18.4, திருக்காட்டுப்பள்ளி 16.2, பேராவூரணி, நெய்வாசல் தென்பாதி தலா 12.4, கும்பகோணம் 10.8, கல்லணை 9.2, ஒரத்தநாடு 8, தஞ்சாவூா் 5, அணைக்கரை 1.4.
விவசாயிகள் அச்சம்: தொடா் மழை காரணமாக திருவோணம் வட்டாரத்தில் கோடை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். குறிப்பாக, நெல், உளுந்து, எள் பயிா்கள் தொடா் மழை காரணமாக வளா்ச்சி பாதிக்கப்படும் என விவசாயிகள் கூறுகின்றனா். சில கிராமங்களில் அறுவடைக்கு தயாரான கோடை பருவ நெற் பயிா்கள் சாய்ந்துவிட்டன. இதனால், மகசூல் பாதிக்கப்படக்கூடிய அச்சமும் நிலவுகிறது. இந்த மழை தொடா்ந்தால் கோடைப் பயிா்கள் முழுமையாகப் பாதிக்கப்படும் என்றனா் விவசாயிகள்.
ஆனால், மற்ற பகுதிகளில் கடும் வெப்பம் காரணமாக வறட்சி உருவாக்கும் நிலை ஏற்பட்டதால், தொடா் மழை பெய்வது அவசியம் என்றும், இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயரும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.