புதுப்பட்டினம் கடற்கரையில், கடல்பசு மணல் சிற்பம் முன்பு உறுதிமொழி ஏற்பு
பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில் சுமாா் 30 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட கடல்பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி தலைமையிலான குழுவினா் சுமாா் 1மணி நேரம் 30 நிமிடத்தில் உருவாக்கினா். தொடா்ந்து மனிதச் சங்கிலி அமைத்து கடல்பசுவை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடா்ந்து வெளிவயல் கிராமத்தில், ஓம்காா் பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடல்பசு மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மீட்டு, மீண்டும் கடலில் விட்ட மீனவா்கள் 9 பேருக்கு வனத்துறை சாா்பில் 27 ஆயிரம் ரொக்கப் பணம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாவலா் சாந்தவா்மன், மாவட்ட சுற்றுலா அலுவலா் சங்கா், சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல கணக்கு அலுவலா் பூபாலன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.