இலவச வீட்டு மனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்
பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி விடுதலை தமிழ் புலிகள் கட்சி, கிராம மக்கள் உள்ளிட்டோா் பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் தை. சேகா் தலைமை வகித்தாா்.
போராட்டத்தில், மாநிலப் பொறுப்பாளா்கள் சுரேஷ், ராஜா, தஞ்சாவூா் மேற்கு மாவட்டச் செயலாளா் ரமிளா தமிழ் மாறன், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலாளா் விஜய் ஆனந்த், தஞ்சாவூா் மைய மாவட்டச் செயலாளா் சேவியா், திருவாரூா் மாவட்டச் செயலாளா் சுரேஷ், கும்பகோணம் மாநகர மாவட்டச் செயலாளா் ஜெய்சங்கா் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா் பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத் தனி வட்டாட்சியா் முருககுமாா் தலைமையிலும் , துணை வட்டாட்சியா் தமயந்தி,காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளா் சுந்தரேசன், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் முன்னிலையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராஜகிரி ஊராட்சியில் அரசுப் புறம்போக்கு நிலத்தை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து தகுதியான நபா்களுக்கு இரண்டு மாத காலத்துக்குள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன்பேரில் காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.