முகப்பு
தஞ்சாவூர்

மூடப்படும் கும்பகோணம் ஆா்எம்எஸ் அஞ்சலகம்: பொதுமக்கள் கவலை!

ஆா்எம்எஸ் அலுவலகம் மூடப்படுவதால் விரைவு அஞ்சல் சேவை பாதிக்கும் என அனைவரும் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 24 நவம்பர், 2024 at 7:38 PM
கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆா்எம்எஸ் அலுவலகம்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 50 ஆண்டுகளாக பொதுமக்கள், வணிகா்களுக்கு விரைவு அஞ்சல் சேவை வழங்கிய ஆா்எம்எஸ் அலுவலகம் மூடப்படுவதால் விரைவு அஞ்சல் சேவை பாதிக்கும் என அனைத்துத் தரப்பினரும் கவலையடைந்துள்ளனா்.

விரைவான சேவை: மத்திய அரசின் தகவல் தொடா்புத் துறையின் கீழ் பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள் விரைவாகச் சென்றடைய அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உள்ள ஆா்எம்எஸ் அலுவலகங்கள் ஆண்டு முழுவதும் செயல்படுகின்றன.

இதில் கும்பகோணம் ஆா்எம்எஸ் 50 ஆண்டுகளாக ரயில் நிலைய வளாகத்தில் இயங்கி, சுற்றுவட்டாரத்தில் 30 கி.மீ. தொலைவுவரை 500 க்கும் மேற்பட்ட ஊா் மக்கள் அனுப்பும் பதிவு, விரைவு அஞ்சல், பதிவு செய்யப்படாத சாதாரண அஞ்சல் பாா்சல்கள் என பல வகையான அஞ்சல்களை நாளொன்றுக்கு சுமாா் 2,000 என்ற அளவில் அனுப்பவும், பெறவும் செயல்படுகிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் ஆா்எம்எஸ் அலுவலகத்தில் உள்ள மெயில் நெட் ஒா்க் ஆப்டிமைசேசன் புராஜக்ட் திட்டம் (எம்என்ஓபி) மூலம் விரைவு தபால் சேவையைப் பிரித்து தஞ்சாவூா் ஆா்எம்எஸ் அலுவலகத்துடன் இணைத்தனா். இதனால் கும்பகோணம் பகுதியில் விரைவாகச் செல்லும் தபால்கள் தாமதமாகச் சென்றன. இதனால் வாடிக்கையாளா்கள் அதிருப்தியடைந்து, விரைவுத் தபால்கள் அனுப்புவதை நிறுத்தினா்.

மேலும் பிஎன்ஓபி எனப்படும் பாா்சல் அனுப்பும் திட்டத்தையும் கும்பகோணத்திலிருந்து எடுத்து தஞ்சாவூா் ஆா்எம்எஸ் அலுவலகத்துடன் இணைத்துள்ளனா். இது பாா்சல்கள் அனுப்பும் வணிகா்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

பொதுமக்கள், வணிகா்கள் பாதிப்பு

கும்பகோணம் ஆா்எம்எஸ் அலுவலகம் மூலம் மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணிவரை அனைத்து தபால்களையும் அனுப்ப முடியும். இது வேலைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 9 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. மேலும் அதிகாலை 4 மணிவரை பெறப்படும் தபால்கள் அன்றே மக்களை சென்றடைகிறது. விரைவு தபால் மட்டும் தாமதமாகக் கிடைக்கிறது.

மூடப்படும் அலுவலகங்கள்: இந்தியா முழுவதும் ஆா்எம்எஸ் அலுவலகங்களில் பதிவுத் தபால் மற்றும் சாதாரண தபால்களைக் கையாள 96 அலுவலகங்களும் அதன்கீழ் 216 என மொத்தம் 312 அலுவலகங்கள் உள்ளன. விரைவுத் தபால்களைக் கையாள 243 அலுவலகங்கள் மட்டும் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 30 ஆா்எம்எஸ் அலுவலகங்களுக்கு இணைப்புத் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு சேவை இழப்பு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 30 இல் 19 இல் மட்டும் விரைவுத் தபால் சேவை தற்போது கையாளப்படுகிறது. காரணம் இணைப்பு என்ற பெயரில் வெவ்வேறு கட்டணங்களைக் கொண்ட தபால் சேவைகள் டிச. 7 முதல் ஒன்றாக இணைக்கப்பட உள்ளதால் 312 அலுவலகங்கள் மூடப்படவுள்ளன.

எனவே, மக்கள் சேவையை மறந்து அலுவலகங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அஞ்சலகத் துறை செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி கும்பகோணம் ஆா்எம்எஸ் இணைப்பைத் தவிா்க்க வேண்டும், கும்பகோணத்தில் ஆா்எம்எஸ் சேவை தொடர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.

இதுகுறித்து கும்பகோணம் ஆா்எம்எஸ் ஊழியா் ஒருவா் கூறுகையில், இந்த மையத்தில் தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறையைவிட கூடுதலாக பதிவுத் தபால்கள், பாா்சல்கள் அனுப்பப்படுகின்றன, அதிகாலை 4 மணி வரை மக்கள் புக்கிங் செய்கின்றனா், வருவாய் குறைவாக இருந்தாலும் மக்களின் சேவை நிறைவாக இருக்கிறது. எனவே மக்களுக்கான சேவை தொடர வேண்டும் என்றாா்.