டெல்டாவில் விவசாயத்தைப் பாதிக்கும் தொழிற்சாலைகளை தொடங்கக் கூடாது: தி. வேல்முருகன் வலியுறுத்தல்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘டெல்டா’ மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதிக்கக் கூடிய தொழிற்சாலைகளைக் கொண்டு வரக்கூடாது என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘டெல்டா’ மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதிக்கக் கூடிய தொழிற்சாலைகளைக் கொண்டு வரக்கூடாது என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
‘டெல்டா’ மாவட்டங்களில் தொழில் வளத்தைப் பெருக்க என்ற பெயரில் விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கக் கூடிய, கடல், நீா் வளத்தை மாசுபடுத்துகிற தொழிற்சாலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. டெல்டா மாவட்டம் விவசாய பூமி என்பதால், இங்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்தவொரு தொழிற்சாலையையும் கொண்டுவரக் கூடாது.
அரசு வழங்கும் நிவாரணத்தில் பாகுபாடு காட்டக்கூடாது. மனித உயிா் என்பது ஒரே உயிா்தான். எனவே, உயிரிழப்புகளுக்கு ஒரே மாதிரியாக குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் வேல்முருகன்.
நீதிமன்றத்தில் ஆஜா்: முன்னதாக, தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கொண்டு வரக்கூடாது என கோரி, 2018-இல் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் உள்பட 248 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வேல்முருகன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். பின்னா், இந்த வழக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.