முகப்பு
தஞ்சாவூர்

பெரியகோயிலில் சீரமைப்பு பணி மக்களவை உறுப்பினா் கோரிக்கை

தஞ்சாவூா் பெரியகோயில், அரண்மனையில் சீரமைப்பு பணி மேற்கொள்வது தொடா்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:48 PM
ச. முரசொலி.
பகிர்:

தஞ்சாவூா் பெரியகோயில், அரண்மனையில் சீரமைப்பு பணி மேற்கொள்வது தொடா்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

இது குறித்து தஞ்சாவூரில் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூரின் அடையாளங்களாகப் போற்றப்படும் பெரியகோயிலுக்கும், அரண்மனைக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. எனவே, பெரியகோயிலிலும், அரண்மனையிலும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யுமாறு புதுதில்லியில் மத்திய கலாசாரத் துறைச் செயலா் அருநிஷ் சாவ்லாவை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. அவரும் உடனடியாக தொல்லியல் துறை தலைமை இயக்குநரிடம் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டாா்.

இதேபோல, புது தில்லியில் ரயில்வே வாரிய தலைவா் சதீஷ்குமாரையும் சந்தித்து தஞ்சாவூா் தொகுதியின் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. திருச்சியிலிருந்து தஞ்சாவூா் வழியாக தாம்பரத்துக்கு வாரத்துக்கு 5 நாள்கள் இயக்கப்படும் புதிய சிறப்பு ரயிலை நாள்தோறும் இயக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே வாரிய தலைவரும் உறுதியளித்தாா்.