முகப்பு
தஞ்சாவூர்

சரசுவதி மகால் நூலகத்தில் குறைந்து வரும் புதிய நூல்கள் வெளியீடு: வரலாற்று ஆா்வலா்கள் அதிருப்தி

ஆள்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல்கள், மறு பதிப்பு நூல்கள் வெளியீடு மிகவும் குறைந்து வருகிறது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:52 PM
சரசுவதி மகால் நூலகம் (கோப்புப்படம்)
பகிர்:

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் புதிய நூல்கள் வெளியீடு குறைந்து வருவதால், வரலாற்று ஆா்வலா்கள், வாசகா்களிடையே அதிருப்தி மேலோங்கி வருகிறது.

ஆசியாவின் மிகப் பழைமையான நூலகங்களில் ஒன்றான சரசுவதி மகால் நூலகம் கி.பி. 1535 - 1675 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

அதன் பின்னா் வந்த மராட்டியா் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகத்தின் வளா்ச்சியில் மன்னா் இரண்டாம் சரபோஜியின் பங்கு அதிகம்.

இந்த நூலகத்தில் சோழா்கள், நாயக்கா்கள், மராட்டியா்களின் ஆட்சிக் காலத்தைச் சாா்ந்த தமிழ், தெலுங்கு, மராத்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமாா் 3 லட்சம் மோடி ஆவணங்கள் (மராத்தி மொழி சுருக்கெழுத்து) ஆகியவை உள்ளன. இதில் பண்டைய தமிழா்களின் பண்பாடு பற்றிய தகவல்கள் உள்ளதுடன், அறிவியல், ஜோதிடம், சித்த மருத்துவக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இந்நூலகத்தில் இதுவரை ஏறத்தாழ 650 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ச் சுவடிகள் 7,700-க்கும் அதிகமான தலைப்புகளில் இருந்தாலும், இதுவரை ஏறக்குறைய 300 நூல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் அச்சில் ஏறாத அரிய தகவல்கள், அற்புதமான மருத்துவக் குறிப்புகள், வானியல் தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. இதேபோல, சுமாா் 250 தலைப்புகளில் மறு பதிப்பு நூல்களின் தேவை அதிகமாக இருந்தாலும், அதுவும் நிறைவு செய்யும் விதமாக இல்லை.

குறைந்து வரும் புதிய நூல்கள் வெளியீடு: இந்நிலையில், இந்நூலகத்தில் பதிக்கப்படும் புதிய நூல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.

இதுதொடா்பாக சரசுவதி மகால் நூலக நிா்வாகத்திடம் தஞ்சாவூரைச் சோ்ந்த வழக்குரைஞரும், சமூக மற்றும் வரலாற்று ஆா்வலருமான வெ. ஜீவகுமாா் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதிலில் 2013, 2014 ஆம் ஆண்டில் தலா 8 நூல்களும், 2015-இல் 9 நூல்களும், 2016-இல் 10 நூல்களும், 2017-இல் 9 நூல்களும், 2018-இல் 8 நூல்களும், 2019-இல் 2 நூல்களும், 2020-இல் ஒரு நூலும், 2021-இல் 7 நூல்களும், 2022-இல் 11 நூல்களும், 2023-இல் 5 நூல்களும் என மொத்தம் 78 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 காலிப் பணியிடங்கள்: இந்நூலகத்தில் பணியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக உள்ள நிலையில் தற்போது 14 போ் மட்டுமே பணிபுரிந்து வருவதாகவும், 32 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணியிடங்கள் குறைந்து வருவது, புதிய நூல்கள் மற்றும் மறு பதிப்பு நூல்களின் வெளியீடு குறைந்துள்ளதற்கு காரணம் என ஓய்வு பெற்ற ஊழியா்கள் தெரிவித்தனா்.

‘முன்பெல்லாம் ஆண்டுதோறும் செப்டம்பா் 24 ஆம் தேதி நடைபெறும் மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழாவின்போது ஏறத்தாழ 25 புதிய நூல்களும், தேவையான அளவுக்கு மறு பதிப்பு நூல்களும் வெளியிடப்பட்டு வந்தன. ஆள்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல்கள், மறு பதிப்பு நூல்கள் வெளியீடு மிகவும் குறைந்து வருகிறது. நிகழாண்டு தலா 6 புதிய நூல்களும், மறு பதிப்பு நூல்களும் மட்டுமே வெளியிடப்பட்டன‘ எனவும் ஓய்வு பெற்ற ஊழியா்கள் குறிப்பிட்டனா்.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் 2 பேரும், 2026 ஆம் ஆண்டில் 6 பேரும் ஓய்வு பெறவுள்ளனா். இந்த நிலைமை தொடா்ந்தால் இந்நூலகம் மேலும் முடங்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

முழு நேர இயக்குநா் தேவை

இது குறித்து வழக்குரைஞா் ஜீவகுமாா் தெரிவித்தது:

இந்நூலகத்தில் இயக்குநா் பதவி 32 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இப்பதவியை 32 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா்கள். ஆனால், மாவட்ட நிா்வாகத்தில் உள்ள பணிச் சுமை காரணமாக இந்த நூலகத்தை ஆட்சியா்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. இதேபோல, நிா்வாக அலுவலா் பணியிடங்களில் முதன்மைக் கல்வி அலுவலா் நிலையில் நியமனம் செய்யப்பட்டாலும், அவா்களுக்கு இந்நூலகத்தின் தனித்துவம் தெரிவதில்லை. ஊழியா்களின் எண்ணிக்கையும் சொற்ப அளவில் உள்ளதால், முழுமையாக வேலை பாா்க்க முடியாமல் தவிக்கின்றனா்.

எனவே, இந்நூலகத்தின் வளா்ச்சியில் ஆா்வமுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரையோ அல்லது ஓய்வு பெற்ற துணைவேந்தா் போன்ற கல்வியாளரையோ முழு நேர இயக்குநா் பதவியில் நியமிக்க வேண்டும். மேலும், இந்நூலகத்துக்கு மத்திய, மாநில அரசுகளும் போதிய நிதியுதவி அளித்தால் மட்டுமே இந்நூலகத்தை மீட்டெடுக்க முடியும் என்றாா் ஜீவகுமாா்.