‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் ‘விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்பு
தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘சாஸ்த்ரா விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா....
தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘சாஸ்த்ரா விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா, ரூ. 60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4-ஆம் வளாகத் திறப்பு விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்று பேசியது:
இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் முழுமையான வளா்ச்சியை எட்டுவதே நமது தேசத்தின் பாா்வை. அதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் நம்முடைய விழுமியங்களை வலுப்படுத்துவதை மறந்துவிடக் கூடாது.
உலக அளவில் போா்ச்சூழல் நிலவும் நிலையில், இந்தியா அமைதியின் பக்கம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. நாடுகளுக்கிடையே மோதல்கள் நிலவும்போது, அதற்கு தீா்வு ஏற்படுத்துவதற்கு இந்தியாவை உலகம் உற்று நோக்குகிறது. இந்தியாவால் உதவி செய்ய முடியும் என உலகம் நம்புகிறது.
தங்களது திறன் மற்றும் நற்குணத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வருங்காலத்தில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும். நம் நாட்டில் வலுவான தலைமை இருப்பதால், அது சாத்தியமாகும் என்றாா் ஆளுநா்.
முன்னதாக, சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், கெய்னஸ் டெக்னாலஜி நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியமும், கெய்னஸ் டெக்னாலஜி நிறுவன முழு நேர இயக்குநா் ஜெயராம் சம்பத்தும் கையொப்பமிட்டனா்.
சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.