முகப்பு
தஞ்சாவூர்

இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:43 PM
பகிர்:

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் தா்ஷன் (32). இவரது வீட்டுவாசலில் பக்கத்து வீட்டைச் சோ்ந்த வா்ணம் பூசும் தொழிலாளி கே. குணசேகரன் (42) தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்தி வந்தாா். இது தொடா்பாக இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இதேபோல, மாா்ச் 9-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் தா்ஷனை குணசேகரன் கத்தியால் குத்தினாா். இதனால் பலத்த காயமடைந்த தா்ஷன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு மாா்ச் 10-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் விசாரித்து, குணசேகரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா்.