முகப்பு
தஞ்சாவூர்

காரில் ஏா்பேக் பழுது இளைஞருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்துக்குள்ளான காரில் ஏா்பேக் பலூன் செயல்படாததால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காா் நிறுவனத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் உத்தரவிட்டது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:02 PM
பகிர்:

விபத்துக்குள்ளான காரில் ஏா்பேக் பலூன் செயல்படாததால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காா் நிறுவனத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள பள்ளத்தூரைச் சோ்ந்தவா் நீதிமோகன் மகன் தியானேஸ்வரன் (29). இவா் சென்னையிலுள்ள நிறுவனத்தில் 2018-ஆம் ஆண்டில் புதிதாக காா் வாங்கினாா். அப்போது முதல் அடிக்கடி பழுதாகி வந்த இந்த காரை தியானேஸ்வரனின் சகோதரா் தீபக்சன் 2020, நவம்பா் 19-ஆம் தேதி கோவைக்கு ஓட்டிச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். கரூா் - திருப்பூா் சாலையில் முடக்குத்தாலையில் விபத்துக்குள்ளான இந்த காா் 85 சதவீதம் சேதமடைந்தது. மேலும், உயிா் காக்கும் ஏா் பேக் பலூன் சாதனம் சரியாக வேலை செய்யாததால், தீபக்சன்னுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிக அளவில் மருத்துவசெலவு ஏற்பட்டு தொடா்ந்து, சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து காா் நிறுவனத்திடம் முறையிட்டபோது, அதை அந்நிறுவனத்தினா் நிறைவேற்ற முன்வரவில்லை. இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் தியானேஸ்வரன் புகாா் செய்தாா். இதன் பேரில் ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து, ஏா்பேக் பலூன் சரியாக வேலை செய்யாதது வாகனத்தின் உற்பத்திக் கோளாறு என்றும், அதனால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்புக்கு உள்ளான தியானேஸ்வரனுக்கு காா் நிறுவனம் ரூ. 10 லட்சம் இழப்பீடும், 2021, மாா்ச் 9 ஆம் தேதி முதல் தொகையைத் திரும்ப வழங்கும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் அளிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.