முகப்பு
தஞ்சாவூர்

குழந்தை தொழிலாளா்களை வேலைக்கு நியமித்தால் தண்டனைஆட்சியா் எச்சரிக்கை

குழந்தை தொழிலாளா்களை வேலைக்கு நியமித்தால் தண்டனை விதிக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:33 PM
பகிர்:

குழந்தை தொழிலாளா்களை வேலைக்கு நியமித்தால் தண்டனை விதிக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) குறித்த மாவட்ட அளவிலான தடுப்புப் படை உறுப்பினா்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளா்களை அனைத்து பணிகளிலும், 14 முதல் 18 வயதுடைய வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளிலும் பணியமா்த்துவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு தொழிலாளா்கள் பணியமா்த்துவோருக்கு குழந்தை தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டப்படி, நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சோ்த்து விதிக்கப்படும். குழந்தைத் தொழிலாளா் எவரேனும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் சைல்டு லைன் அமைப்புக்கு 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன், மாவட்டக் குழந்தைகள் நல குழுமத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலா் அசோக்குமாா், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் டி. ஸ்ரீபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.