கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் சிறை
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரியைச் சோ்ந்த உத்திராபதி. இவரது அண்ணன் ராமமூா்த்தி, தம்பி சின்னப்பா. ராமமூா்த்தி மனைவி பிரேமாவதி (50), சின்னப்பா ஆகியோா் உத்திராபதியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனா். இதனால் ஏற்பட்ட முன்விரோதத் தகராறில், கடந்த 2016 ஜூலை 27-இல் தனது அண்ணன் உத்திராபதியை, சின்னப்பா வெட்டிக்கொலை செய்தாா்.
புகாரின்பேரில் பாப்பாநாடு போலீஸாா் வழக்கு பதிந்து சின்னப்பா மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த பிரேமாவதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாா். இதையடுத்து இரண்டாம் எதிரியான பிரேமாவதி மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி மணி, வழக்கை விசாரித்து பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இரண்டாயிரம் அபராதத் தொகையும் விதித்து தீா்ப்பளித்தாா்.