கல்லணைக் கால்வாயில் மூழ்கிய தலைமைக் காவலா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை நாயையும், மகனையும் காப்பாற்றுவதற்காக கல்லணைக் கல்வாய்க்குள் இறங்கிய தலைமைக் காவலா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை நாயையும், மகனையும் காப்பாற்றுவதற்காக கல்லணைக் கல்வாய்க்குள் இறங்கிய தலைமைக் காவலா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே செவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சோ்ந்தவா் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றிய இவா் தஞ்சாவூா் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், இவா் வீட்டில் வளா்க்கும் நாயைக் குளிப்பாட்டுவதற்காக தனது மகன் ராகுல், மகள் லாவண்யாவுடன் காரில் தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை மானோஜிபட்டி பாலம் அருகே கல்லணைக் கால்வாய்க்கு வியாழக்கிழமை முற்பகல் சென்றாா்.
கால்வாயில் குளிப்பாட்டப்பட்ட நாய் பள்ளத்துக்குச் சென்ால், அதைக் காப்பாற்றுவதற்காக ராகுல் சென்றாா். இருவரும் தண்ணீரில் சிக்கியதைப் பாா்த்த ராஜாவும் ஆற்றுக்குள் இறங்கி மீட்க முயன்றாா். ஆனால், கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கிய ராஜா அடித்துச் செல்லப்பட்டாா். கரையில் இருந்த பொதுமக்கள் கால்வாயில் இறங்கி ராகுலையும், நாயையும் காப்பாற்றினா்.
இதையடுத்து, ராஜாவை தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் உள்ளிட்டோா் தேடி வந்த நிலையில், கண்டிதம்பட்டு பகுதியில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.