தஞ்சை மாவட்டத்தில் தென்னை சாா்ந்த தொழில்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின், தஞ்சாவூா் மாவட்ட 2-ஆவது மாநாடு, பட்டுக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் எம்.செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.வேலுச்சாமி வேலை அறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவா் பி.செந்தில்குமாா், தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் ஆா்.சி.பழனிவேலு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளா் விஜயமுருகன் சிறப்புரையாற்றினாா். மாநாட்டில், புதிய மாவட்டத் தலைவராக எம். செல்வம் உள்பட உள்ளடக்கிய 17 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.
அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகளில், பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில், தென்னை சாா்ந்த தொழில்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். பேரவூரணியில் கொப்பரை கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனா்.