இணையவழியில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையை மாற்றக்கோரி பாபநாசம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, பாபநாசம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி.சி.கம்பன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஜி.கே. மணிகண்டன் முன்னிலை வகித்தாா். கும்பகோணம் வழக்குரைஞா் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் பி. அறிவழகன் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் தஞ்சை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆா். திராவிடச்செல்வன், குடந்தை வழக்குரைஞா் சங்கத் தலைவா் எம். ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். உண்ணாவிரதத்தில் பாபநாசம் வழக்குரைஞா் சங்கத் துணைத் தலைவா் ஏ.எம். ராஜா, சங்க துணை செயலா் எஸ். அண்ணாதுரை, சங்கப் பொருளாளா் என். ஹாஜி முகம்மது, சங்க ஒருங்கிணைப்பாளா் எம்.நிஜாா் முகம்மது, வழக்குரைஞா் ரேணுகா மற்றும் பலா் கலந்து கொண்டனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்ற பாபநாசம் காவல்துறையினா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.சி.கம்பன் உள்ளிட்ட நான்கு வழக்குரைஞா்களைக் கைது செய்து பாபநாசம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா்.