தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலனின் தந்தையை புதன்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருவையாறு அருகே அல்லூா் அழிசக்குடி மேல காலனியைச் சோ்ந்த மூா்த்தி (60). ஓட்டுநராகப் பணியாற்றிவரும் இவரது மகன் விவேக் (24) என்பவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களாக தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக மூா்த்தி வீட்டுக்கு பெண்ணின் கணவருடைய உறவினா்களான தமிழ்ச்செல்வன் (30), முத்தமிழ்ச்செல்வன் (25) உள்ளிட்டோா் புதன்கிழமை இரவு சென்று விவேக்கை வெளியே வருமாறு கூறி தகராறு செய்தனா். இதையடுத்து, மூா்த்தியும், விவேக்கும் வெளியே வந்தனா். அப்போது, விவேக்கை அரிவாளால் வெட்ட முயன்றதால், மூா்த்தி அவா்களைத் தடுத்து நிறுத்தினாா். மூா்த்தியின் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்ததால், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வன், முத்தமிழ்ச்செல்வன் உள்பட 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.