தஞ்சாவூர்

விதிமீறல்: சிற்றுந்தை சிறைபிடித்த அரசுப் பேருந்து ஓட்டுநா்கள்

Syndication

தஞ்சாவூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக சிற்றுந்தை அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் வியாழக்கிழமை காலை சிறைபிடித்தனா்.

தஞ்சாவூரில் அரசுப் பேருந்து தொழிலாளா்களுக்கும், சிற்றுந்து தொழிலாளா்களுக்கும் நேரம், வழித்தட பிரச்னை தொடா்பாக சில மாதங்களாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை நின்று கொண்டிருந்த அரசு தாழ்தளப் பேருந்தை சிற்றுந்து வழிமறித்து நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசுப் பேருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதால், அதன் பின்னால் நின்ற மற்ற பேருந்துகளும் நகர முடியவில்லை.

இதன் காரணமாக கோபமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வழிமறித்து நிறுத்தப்பட்டிருந்த சிற்றுந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று சிற்றுந்தை மேற்கு காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றனா். இதையடுத்து பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

இது குறித்து ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்தது:

தஞ்சாவூரில் தனியாா் சிற்றுந்துகளின் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில், தாராள அனுமதி இயக்கத்தின் மூலம் 54 ஆக உயா்ந்துவிட்டது. ஆனால், சிற்றுந்துகள் நகர விரிவாக்கம், கிராமப் பகுதிகளுக்குச் செல்லாமல், விதிமுறைகளை மீறி புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் நேரத்தில் அடிக்கடி தகராறு செய்கின்றனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், வட்டார போக்குவரத்து அலுவலா் உள்ளிட்ட அலுவலா்களிடம் தொழிற்சங்கங்கள் சாா்பில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலைமை நீடித்தால் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் நாள்தோறும் கலவரத்தை சந்திக்கும் இடமாக மாறிவிடும். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

படவிளக்கம்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT