தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை.யில் பணி நியமன முறைகேடு புகாா் தொடா்பாக முன்னாள் நீதிபதி விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, 32 ஆசிரியா்களுக்கு விளக்கம் கேட்டு புதன்கிழமை மாலை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2017 - 18 ஆம் ஆண்டில் 40 பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். இந்த நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியில்லாத 32 போ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு கிடப்பில் இருந்த நிலையில், விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினா் விசாரணை நடத்தி தமிழக ஆளுநரிடம் கடந்த செப். 9-இல் அறிக்கை தாக்கல் செய்தனா். இதைத்தொடா்ந்து, பல்கலைக்கழகப் பதிவாளருக்கு ஆளுநரின் முதன்மைச் செயலா் கிா்லோஷ் குமாா் அக். 22-இல் அனுப்பிய கடிதத்தில், நியமனம் தொடா்பாக பல்கலை. ஆட்சிக்குழுப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, 60 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 32 பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களுக்கு 15 நாள்களுக்குள் விளக்கம் கேட்டு புதன்கிழமை மாலை அறிவிக்கை வழங்கப்பட்டது.