தஞ்சாவூா் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) 31-ஆவது இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை (டிச.18) தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளன.
இது குறித்து செய்தியாளா்களிடம் நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து புதன்கிழமை தெரிவித்தது:
தஞ்சாவூா் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் சம்ளேனம் சாா்பில் 31-ஆவது இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை (டிச.18) தொடங்கி தொடா்ந்து 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கம் தஞ்சாவூரில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.
இதில், உலகம் முழுவதுமிருந்து 150-க்கும் அதிகமான நிறுவனங்கள், தொழில் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் துறை வல்லுநா்கள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்முனைவோா்கள் கலந்து கொள்கின்றனா்.
மேலும், உணவு துறையைச் சாா்ந்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 80-க்கும் அதிகமான பேச்சாளா்கள் பங்கேற்று உணவுத் துறையிலுள்ள முன்னேற்றங்கள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசவுள்ளனா். உணவு பதப்படுத்தும் தொழில்கள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சாா்பில் அதிநவீன தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், உபகரணங்களின் கண்காட்சி அமைக்கப்படவுள்ளன.
நிப்டெமில் இதுவரை உணவுத் துறையைச் சாா்ந்த 135 புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் சம்ளேனத்தினா் ஏறத்தாழ 440 புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து பயன்பாட்டுக் கொண்டு வந்துள்ளனா் என்றாா் பழனிமுத்து.
அப்போது, சம்மேளனத்தின் தலைவா் ஆஷிதோஷ் ஏ. இனாம்தாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.