தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தின்போது, ஆட்சியா் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியைக் காவல் துறையினா் மீட்டனா்.
தஞ்சாவூா் அருகே குருங்குளம் மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் பழனிவேல் (38). தொழிலாளி. இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக தான் வசிக்கும் பகுதி மக்களுடன் வந்தாா். இவா் ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு, தனது கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றிக் கொண்டாா்.
இதைப் பாா்த்த காவல் துறையினா் உடனடியாக அவரை மீட்டு வெளியே அழைத்து வந்து, அவா் மீது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் தண்ணீரை ஊற்றினா்.
தொடா்ந்து அவரிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், குருங்குளம் மேல்பாதி பகுதியில் 60 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இந்த மனை உட்பிரிவு செய்யப்படாமல், கணினியிலும் ஏற்றப்படவில்லை. இதனால், மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனா்.
இதற்காக நில அளவையா் அழைத்து வந்தாலும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை; அடங்கல் இல்லை எனக் கூறி, அளவீடு செய்யாமல் சென்றுவிடுகின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏறத்தாழ 10 முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆட்சியா் முன் பழனிவேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. பழனிவேலுக்கு அறிவுரை வழங்கி போலீஸாா் அனுப்பிவைத்தனா்.