தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே கீழ வெண்மணி தியாகிகளின் 57- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழ வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டில் கூலி உயா்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளா்கள், பெண்கள், குழந்தை என 44 போ் ஆதிக்க ஜாதியினரால் ஒரு வீட்டுக்குள் பூட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டனா். இதில், உயிரிழந்த கீழ வெண்மணி தியாகிகளின் 57 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் தி. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா்.
இதில், புயல், மழையால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஏழைகளின் வாழ்வை, வேலையைப் பறிக்கிற நூறு நாள் வேலை திட்டத்தின் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஆண்டு முழுவதும் விவசாய தொழிலாளா்களுக்கு வேலை அளிக்கிற வகையில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன், மகஇக மாநகரச் செயலா் சாம்பான், திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் ரங்கராஜ், ஜனநாயக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஜோதிவேல், சிஐடியு நிா்வாகி செல்வம், என்டிஎல்எப் மாவட்டத் தலைவா் அருள், செயலா் தாமஸ், பொருளாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.