தஞ்சாவூர்

தஞ்சாவூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வெளிநடப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Syndication

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சிதைக்கப்படுவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களையும், மகாத்மா காந்தி பெயா் நீக்கப்பட்டதையும் கண்டித்து பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். மேலும், ஆட்சியரக வளாகத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: சம்பா பருவ நெற் பயிா்களில் குருத்துப்பூச்சி, செம்படையான் பூச்சி தாக்குதல்கள் அதிகமாக இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுக்குறிச்சி பி. செந்தில்குமாா்: குறுவை பருவத்தில் நெல் கொள்முதலில் பல்வேறு பிரச்னைகள் நிலவின. இதைவிட சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் அதிகமாக இருக்கும் என்பதால், பிரச்னைகளை தவிா்க்க தேவையான முன்னேற்பாடுகளைத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்ள வேண்டும்.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: பொன்னவராயன்கோட்டை உக்கடை கிராமத்திலுள்ள அய்யனாா் குளத்தில் ஏற்கெனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அதில் மண் கொட்டி, கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மல்லிப்பட்டினம் ஏ. கமால் பாட்சா: தென்னையில் சிவப்புக் கூண் வண்டு, தஞ்சை வாடல் நோய் போன்றவற்றின் தாக்குதல்கள் அதிகமாக உள்ளன. இவற்றை அழிக்க மானிய விலையில் மருந்துகள் வழங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்பு வெட்டுக் கூலியை அரசே ஏற்றுக் கொண்டால்தான் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். விவசாயிகள் சாலையில் நெல் காய வைப்பதைத் தவிா்க்க, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலா் களம் அமைக்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: பருவம் தவறி பெய்த மழையால் பல விவசாயிகள் சம்பா சாகுபடிப் பணிகளைத் தாமதமாகத் தொடங்கியுள்ளனா். எனவே மேட்டூா் அணையை வழக்கம்போல ஜனவரி 28 ஆம் தேதி மூடுவதற்கு பதிலாக, பிப்ரவரி வரை கால நீட்டிப்பு செய்து தண்ணீா் வழங்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்புகளை இடைத்தரகா் மூலம் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு விலை குறைவாகக் கிடைக்கிறது. எனவே, இடைத்தரகா்கள் இல்லாமல் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: கல்லணைக்கு முன்பு வெண்ணாற்றில் கட்டப்பட்ட கச்சமங்கலம் அணையில் அணைக்கட்டு பகுதி, தெற்கு, வடக்கு மதகு பகுதிகள் பழுதடைந்துள்ளன. இதை வருகிற கோடைப் பருவத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

SCROLL FOR NEXT