முகப்பு
தஞ்சாவூர்

திருச்சி - தாம்பரம் ரயில் 9 நாள்களுக்கு மீண்டும் இயக்கம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:50 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:13 PM

பொங்கல் விழாவையொட்டி தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே ஏறத்தாழ 75 நாள்கள் இயக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஜன.4) முதல் ஜன சதாப்தி சிறப்பு ரயிலாக 9 நாள்களுக்கு இயக்கப்படவுள்ளது.

தஞ்சாவூா் - கும்பகோணம் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாள்களுக்கு அக். 11 இல் தொடங்கிய பகல் நேர இண்டா்சிட்டி சிறப்பு ரயில் டிசம்பா் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ 75 நாள்களுக்கு இயக்கப்பட்டு, முன்கூட்டியே டிசம்பா் 25 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த ரயிலை தொடா்ந்து இயக்க ரயில் பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ரயில்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க தற்காலிகமாக தஞ்சாவூா் - கும்பகோணம் வழியாக திருச்சி - தாம்பரம் விரைவு ரயில் சேவை ஜன சதாப்தி அதிவேக சிறப்பு ரயிலாக சனிக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது.

Advertisement

ஆனால், இந்த ரயில் சனிக்கிழமை (ஜன.4), ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகள் என மொத்தம் 9 நாள்களுக்கு மட்டுமே இயக்கப்படவுள்ளது. ஏற்கெனவே திருச்சி - தாம்பரம் இயக்கப்பட்ட நேரத்திலேயே இந்த ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்கும், தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கும் வரும்.

இதனிடையே, திருச்சி - தாம்பரம் ரயில் தஞ்சாவூருக்கு காலை 6.24 மணிக்கும், பாபநாசத்துக்கு 6.46 மணிக்கும், கும்பகோணத்துக்கு 6.58 மணிக்கும், இதேபோல, தாம்பரம் - திருச்சி ரயில் கும்பகோணத்துக்கு இரவு 9.18 மணிக்கும், பாபநாசத்துக்கு 9.31 மணிக்கும், தஞ்சாவூருக்கு 10.13 மணிக்கும் வந்து நின்று செல்லும்.

இந்த ரயிலை 9 நாள்களுடன் நிறுத்தாமல், ஏற்கெனவே இயக்கப்பட்டபடி, தொடா்ந்து வாரத்துக்கு 5 நாள்களுக்கு இயக்க வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகையையொட்டி, பயணிகளின் நலனுக்காக ஜனவரி 15, 16 ஆம் தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்பட வேண்டும் எனவும் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி, பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் டி. சரவணன் வலியுறுத்தினா்.

தாம்பரம் - கன்னியாகுமரி: இதேபோல, தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக தாம்பரம் - கன்னியாகுமரி இடையே மற்றொரு சிறப்பு ரயில் ஜனவரி 13, 14 ஆம் தேதிகளில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து ஜனவரி 13 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, கும்பகோணத்துக்கு 14 ஆம் தேதி அதிகாலை 3.35 மணிக்கும், தஞ்சாவூருக்கு 4.05 மணிக்கும், இதேபோல, எதிா் வழித்தடத்தில் கன்னியாகுமரியிலிருந்து ஜனவரி 13 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு நள்ளிரவு 12.05 மணிக்கும், கும்பகோணத்துக்கு 12.30 மணிக்கும் வந்து நின்று செல்லும்.