மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் தமிழ்நாட்டில் 75 சதவீதத்துக்கு கீழ் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,500-ம், அதற்கு மேல் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 ஆயிரமும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இன்றைய சூழலில் இந்த உதவித்தொகை அத்தியாவசிய பொருள்கள் வாங்கக்கூட போதுமானதாக இல்லை.
புதுச்சேரி மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரத்து 800, அரியானாவில் ரூ. 3 ஆயிரத்து 500, தெலங்கானாவில் ரூ. 4 ஆயிரத்து 16, ஆந்திர மாநிலத்தில் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சி.ஏ. சந்திரபிரகாஷ், அன்புமணி, சி. ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக ஏறத்தாழ 100 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.