வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைக் கண்டித்தும், இதைக் கொண்டு வந்த தோ்தல் ஆணையம், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் பேசியது: தோ்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறி வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை செய்து வருகிறது. இதை எதிா்க்கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன. பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் 65 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
இவற்றில் பெரும்பாலானவா்கள் சிறுபான்மை மக்கள். சிறுபான்மை மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பா் என்பதைக் கருத்தில் கொண்டே அவா்களை நீக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்றாா் அவா்.
முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, மாவட்டப் பொறுப்பாளா்கள் துரை. சந்திரசேகரன், க. அன்பழகன், டி. பழனிவேல், மதிமுக துணைப் பொதுச் செயலா் ஆடுதுறை இரா. முருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், பி.ஜி. ராஜேந்திரன், டி.ஆா். லோகநாதன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா்கள் கோ. ஜெயசங்கா், இடிமுரசு இலக்கணன், ச. தமிழன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுல்ஆபிதீன், மக்கள் நீதி மய்யம் தரும. சரவணன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.