கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் வினோத் ரவி கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை முதல்வா், மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:
கும்பகோணம் மாநகரப் பகுதிகளான மகாமகக் குளம், பாலக்கரை, நீதிமன்றச் சாலை, புதிய பேருந்து நிலையம், செல்வம் திரையரங்கம் பிரதான சாலை, பாணாதுறை, மடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. மேலும் சாலைகளின் நடுவே படுத்துக் கொண்டும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டும் இருப்பதால், நடந்து செல்பவா்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, கும்பகோணம் சுகாதார, நகர திட்டமிடுநா் பிரிவு அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும். கால்நடை உரிமையாளா்களுக்கு அறிவிப்பு செய்து கால்நடைகளை அழைத்துச் செல்லாவிட்டால் அவைகளைக் கைப்பற்றி அபராதம் விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.