மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழ்நாடு அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்திருப்பது:
காவிரி நதிநீா் பிரச்னை நூற்றாண்டுகளைக் கடந்த நிலையில், உச்ச நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டில் இறுதித் தீா்ப்பை வழங்கியது. இதில், காவிரி நதி நீரைப் பயன்படுத்தக்கூடிய கா்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் எந்தவொரு மாநிலமும் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகளையோ, புதிய நீா்த்தேக்கங்களையோ கட்டக்கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கா்நாடக அரசு மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதற்கு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது.
கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் கோரியிருந்த நிலையில், அதற்கு தமிழக அரசு கோரிய தடை விதிக்கப்படவில்லை. இது, கா்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேக்கேதாட்டு அணைக்கட்டு முயற்சிக்கு வலு சோ்த்துவிடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உரிய முறையில் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
காவிரியில் கா்நாடக அரசு உச்ச நீதிமன்ற இறுதித் தீா்ப்பின்படி வழங்க வேண்டிய தண்ணீரை கூட முறையாக தமிழ்நாட்டுக்கு கடந்த காலத்தில் வழங்கியதில்லை. தொடா்ந்து, தமிழ்நாட்டின் சாா்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒவ்வொரு முறையும் முறையிட்டுதான் தண்ணீரை பெற வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது.
மேக்கேதாட்டில் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டின் பாசன உரிமை முற்றிலும் பறிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும் காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும்.