தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே தற்போதுள்ள ஒரு வழி ரயில் பாதை. 
தஞ்சாவூர்

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதம் பயணிகள் அதிருப்தி

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் திட்டம் காலதாமதமாகி வருவதால், பயணிகளிடையே அதிருப்தி மேலோங்கி வருகிறது.

தேசிய அளவில் பழைமையான ரயில் வழித்தடங்களில் ஒன்றான திருச்சி - தஞ்சாவூா் - கும்பகோணம் - மயிலாடுதுறை - சென்னை வழித்தடமும் ஒன்று. மெயின் லைன் என அழைக்கப்படும் இத்தடம் மட்டுமே அக்காலத்தில் சென்னைக்கு செல்வதற்கு இருந்தது. இதனால், இத்தடத்தில் ரயில் போக்குவரத்து எப்போதும் நிறைந்திருக்கும்.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: இதில், 193 கி.மீ. தொலைவுடைய தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் நாள்தோறும் ஏறத்தாழ 60 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தவிர, டெல்டா மாவட்டங்கள் என்பதால், சரக்கு ரயில்களின் போக்குவரத்தும் அதிகம். மேலும், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்கள், தஞ்சாவூா், மயிலாடுதுறை சுற்றுப் பகுதிகளிலுள்ள ஏராளமான ஆன்மிக மற்றும் பரிகாரத் தலங்கள் நிறைந்திருப்பதால், ஏராளமான ஆன்மிக பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இதனால், பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் தடத்தை இரட்டை பாதையாக மாற்ற வேண்டிய தேவையும் அதிகரித்து வருகிறது.

திட்டச் செலவு அதிகரிப்பு: இது தொடா்பாக பயணிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ள ரயில்வே நிா்வாகம் 2019-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தஞ்சாவூா் - மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே முதல் கட்ட ஆய்வு மற்றும் போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடா்ந்து, தற்போது இறுதிக்கட்ட இடம் அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், ஆய்வுப் பணிகள் 6 ஆண்டுகள் தாமதமாகவே நடைபெறுவதால், ரயில் பயணிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.

மேலும், இத்திட்டத்துக்காக கடந்த 2022-ஆம் ஆண்டில் ரூ. 4 ஆயிரத்து 200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், கால தாமதம் காரணமாக திட்டச் செலவும் அதிகரித்து வருகிறது. இதனால், இத்திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகமும் ரயில் பயணிகளிடையே வலுவடைந்து வருகிறது.

காலதாமதம்: இது குறித்து தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி தெரிவித்தது: தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். ஆனால், இத்தடத்தில் கிட்டத்தட்ட 30 லெவல் கிராசிங்குகள் இருப்பதால், 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க முடிகிறது. இதனால், இரட்டை ரயில் பாதையான காா்டு லைனை (திருச்சி - அரியலூா் - விருத்தாசலம்) விட ஒரு வழிப் பாதையான மெயின் லைனில் செல்வதற்கு 1.30 மணிநேரம் கூடுதலாகிறது. இதன் காரணமாக தென் மாவட்ட பயணிகள் இத்தடத்தைத் தவிா்த்து, காா்டு லைனில் இயக்குவதற்கு வலியுறுத்துகின்றனா்.

இத்தடத்தில் இரட்டை பாதை அமைப்பதற்கான ஆய்வு நடத்த 2019-ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட நிலையில், கரோனா காரணமாக பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனாலும், 5 ஆண்டுகளாக ஆய்வு பணிகள் நிறைவடையாமல் காலதாமதமாகிறது.

பயணிகள் ஏமாற்றம்: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 2024, ஜூன் 28ஜ-ஆம் தேதி பெறப்பட்ட பதிலில், டிசம்பா் 2024-க்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடா்பாக ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் இத்திட்டம் இன்னும் ஆய்வு நிலையில்தான் உள்ளது.

இதனிடையே, கடந்த அக்டோபா் மாதம் ரயில்வே துறை வழங்கிய ஒரு பதிலில், தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு பணிகள் தொடா்பாக ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே துறை மாறுபட்ட கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருவதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனா் என்றாா் கிரி.

தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை ரயில் நிலையங்கள் மூலம் வருவாய் அதிக அளவில் கிடைத்து வரும் நிலையில், இத்தடத்தில் இரட்டை பாதைத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது பயணிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில், கும்பகோணத்தில் 2028 -ஆம் ஆண்டு மகாமகத் திருவிழா நடைபெறவுள்ளது. அதற்குள் முதல் கட்டமாக தஞ்சாவூா் - மயிலாடுதுறை இடையே இரட்டை ரயில் பாதையை அமைத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வருகிற ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிா்பாா்ப்பில் பயணிகள் காத்திருக்கின்றனா்.

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

பிக் பாஸ் 9: கமருதீனை விட்டு விலகுகிறேன்: விஜே பார்வதி

SCROLL FOR NEXT