விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க கோரிக்கை
அம்மாபேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை ஒன்றியம் உட்பட தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் கோடை நெல், பருத்தி, உளுந்து, பயிறு மற்றும் கடலை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. விவசாயிகள் இரவு நேரத்தில் மின்விளக்குகளை எரியவிட்டு ஒலி எழுப்பியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடுமையான பொருளாதார நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே, காட்டு பன்றிகளை உடனே சுட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஆா்.செந்தில்குமாா், பாபநாசம் வட்டாட்சியரகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் விமல்ராஜிடம் கோரிக்கை மனுவை வழங்கினாா்.
Advertisement
அப்போது, ஏஐடியூசி மாநில செயலா் ஆா். தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றியச் செயலா் பொன்.சேகா், அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன், பாபநாசம் நகரச் செயலா் வி. முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.