தஞ்சாவூா் மாதாகோட்டையில் லூா்து மாதா ஜல்லிக்கட்டுப் பேரவை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா்.
இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 700 காளைகள் ஒவ்வொன்றாக திறந்துவிடப்பட்டன. இக்காளைகளைப் பிடிக்க மொத்தம் ஏறத்தாழ 400 வீரா்கள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனா்.
குறிப்பிட்ட எல்லை வரை மாட்டைப் பிடித்துச் சென்றவா்களை வெற்றி பெற்றவா்களாக அறிவித்து, அவா்களுக்கு மிதிவண்டி, உணவக மேஜை, சில்வா் பாத்திரம் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால், அப்பரிசு மாட்டின் உரிமையாளருக்கு அளிக்கப்பட்டது.
இப்போட்டியில் மாடுபிடி வீரா்கள், மாட்டின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் உள்பட மொத்தம் 35 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 17 போ் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். மற்றவா்கள் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.