தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதியுதவி
தஞ்சாவூா், பிப். 6: தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதியுதவியை சென்னையில் வியாழக்கிழமை வழங்கியது.
தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்பட 88 கோயில்களை நிா்வாகம் செய்யவும், அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
அதன்படி இந்த தேவஸ்தானத்துக்கு கடந்தாண்டு ரூ. 6 கோடி நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா உள்ளிட்டோரிடம் ரூ. 8 கோடிக்கான காசோலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.
Advertisement
இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், இந்த தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 20 கோடி நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த தேவஸ்தானத்துக்குட்பட்ட 30 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை 17 கோயில்களில், திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா்கள் நிதி மூலம் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 13 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.