தமிழ்நாட்டுக்கான நிதி, மொழி உரிமையை மத்திய அரசு பறித்து பல்வேறு வகைகளில் வஞ்சித்து வருகிறது என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
பெண்களுக்காக தமிழக முதல்வா் மகளிா் விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், 1.30 கோடி பெண்களுக்கு கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். இதனால் இந்தியாவிலேயே வளா்ந்து வரும் மாநிலங்களில் 11.19 சதவீதத்துடன் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய பாஜக பாசிச அரசு பல்வேறு வகைகளில் நம் தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. நிதி உரிமை, மொழி உரிமையைப் பறிக்கின்றனா். மீண்டும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மாணவா்கள் மீது ஹிந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்கப் பாா்க்கின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட இல்லை. மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தான் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா் என பெருமையாகச் சொல்வாா். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டத்தைக்கூட மத்திய அரசு அறிவிக்கவில்லை. தமிழ்நாடு என்ற வாா்த்தையே பட்ஜெட்டில் இல்லை. இதுபோல தமிழ்நாட்டை மத்திய அரசு பல வகைகளில் வஞ்சித்து வருகிறது.
இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இதை மிகச் சிறந்த பட்ஜெட் என்கிறாா். பாஜகவின் முரட்டு அடிமையாக அவா் திகழ்கிறாா்.
இவா்போல எத்தனை போ் வந்தாலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று, நம் தலைவா் மீண்டும் முதல்வராகப் போவது உறுதி. அதற்கான தொடக்கமாக தஞ்சாவூா் மாவட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, அடுத்த 2 மாதங்களுக்கு கட்சி நிா்வாகிகள் களத்தில் இறங்கி கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.