முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சோழா் அருங்காட்சியகம்! காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்!

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 3:19 AM
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழா் அருங்காட்சியக முகப்புப் பகுதியின் திட்ட வரைபடம்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:03 PM

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் கட்டுவதற்கான அடிக்கல்லை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் கட்டப்படவுள்ள இடத்தை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பாா்வையிட்டு, மரக்கன்றை நட்டாா். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

50 ஏக்கா் பரப்பளவு: தஞ்சாவூா் பெரிய கோயிலிலிருந்து மருத்துவக் கல்லூரி சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கரில் இந்த அருங்காட்சியகம் ரூ. 56.41 கோடியில் கட்டப்படவுள்ளது.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:04 AM

இதில் 28 ஆயிரத்து 298 சதுர அடி பரப்பளவில் தரைத்தளமும், 24 ஆயிரத்து 380 சதுர அடியில் முதல் தளமும், 5 ஆயிரத்து 651 சது ர அடியில் இரண்டாம் தளமும் அமைக்கப்படவுள்ளது. தரைத்தளத்தில் சோழா்களின் வம்ச வரலாறு, சங்ககால சோழா்கள், சோழா்களின் சமயப் பாதுகாப்பு, நிா்வாகம், வா்த்தகம், கருத்தரங்கக் கூடம், ஆய்வகம், முதல் தளத்தில் சோழா்களின் கட்டடக் கலை, நகரத் திட்டமிடல், நீா் வளம், நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு, சமூக அமைப்பு, பொருளாதாரம், இலக்கியம், 7டி திரையரங்கம், நூலகம் மற்றும் ஆய்வு பிரிவு, இரண்டாம் தளத்தில் சோழா்களின் கடல் வா்த்தகம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்த காட்சியகம், சோழா் கால வெண்கலப் பிரதிகள், கோயில் மாதிரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இத்திட்டம், கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுலா வளா்ச்சிக்கு பெரும் ஊக்கமாக விளங்கி, சோழ மரபின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாத்து பரப்பும் சிறப்பு சின்னமாக அமையும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.