முகப்பு
தஞ்சாவூர்

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தை தமிழக அரசு முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தல்

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேக்கமடைவதால், அவா்களைத் தமிழக அரசு அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தல்

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:26 AM
வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:23 PM

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேக்கமடைவதால், அவா்களைத் தமிழக அரசு அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஐடியூசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தெரிவித்திருப்பது: ‘டெல்டா’ மாவட்டங்கள் முழுவதும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் பணி தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக திருவாரூா் மாவட்டத்தில் முழு வீச்சில் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் நிகழாண்டு ஆங்காங்கே திறந்தவெளி சேமிப்பு நிலையங்களைத் திறந்து, நெல் இயக்கம் செய்வதற்கும், இறக்குவதற்கும் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் லாரி உரிமையாளா்களின் திடீா் வேலைநிறுத்தத்தால் திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் இயக்கம் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, தமிழ்நாடு அரசு லாரி உரிமையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தேங்கியுள்ள நெல் முட்டைகளை இயக்கம் செய்வதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும், பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகள் அனைத்தையும் திறந்தவெளி சேமிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.