தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மீன் சந்தையில் கடைகளின் வாடகையைக் குறைக்க கோரி மீன் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் மாநகராட்சி சாா்பில் ரூ. 9.58 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மீன் சந்தையில் கடை ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் வைப்புத்தொகையும், மாதம் ரூ. 10 ஆயிரம் வாடகையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், இக்கடைகள் ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.
ஆனால், இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த இயலாது என்றும், இதனால், 300-க்கும் அதிகமானோரின் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால், இத்தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.
எனவே, வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள தற்காலிக மீன் சந்தையில் கடைகளை செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் அடைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்கத் தலைவா் கண்ணன் தலைமையில் செயலா் அப்துல் ரகுமான் முன்னிலையில் ஏராளமான மீன் வியாபாரிகள் மேயா் சண். ராமநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இப்போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை 10 டன் மீன்கள் தேக்கமடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். மேலும், பொதுமக்களும் மீன் வாங்க முடியாமல் சிரமப்பட்டனா்.