தஞ்சாவூா் மாவட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களைக் காலம் தாழ்த்தாமல் உரிய காலத்தில் தொடங்கி தரமாக தூா் வார வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: பயிா் அறுவடை சோதனையை விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய வேண்டும். மகசூல் அளவு தெரிந்தவுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகையை வரவு வைக்க வேண்டும்.
பெரமூா் ஆா். அறிவழகன்: ஊராட்சி செயலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் வேலைநிறுத்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: வெண்ணாறு பிரிவு பிள்ளை வாய்க்காலில் வெள்ளாம்பெரம்பூா் வலது கரையில் விவசாய பயன்பாட்டுக்காக தாா் சாலை அமைக்குமாறு கடந்த 13 ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக இச்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்பத்து ந. சுந்தரவடிவேல்: சித்தாயலில் ஆழ்துளை குழாய் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த இடத்தில் உவா் நீராக மாறிவிட்டது. எனவே, காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: நீா் வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை வேளாண் பொறியியல் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு சென்றால், அத்துறையிலுள்ள இயந்திரங்கள் மூலம் தூா் வாரும் பணி மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
கூத்தூா் எம். ரெங்கராஜன்: காவிரிப் படுகையில் திருவையாறு வேத பாட சாலைக்கு சொந்தமான ஏறத்தாழ 500 ஏக்கா் நிலத்தில் சாகுபடி செய்த நெல்லுக்கு கொள்முதல் நிலையத்தில் சிட்டா, அடங்கல் கேட்கப்படுகிறது. ஆனால், குத்தகை விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கல் கிடைக்காததால் நெல்லை விற்கும்போது சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
மணத்திடல் எஸ். சிவகுமாா்: சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை நம்பி சிறு, குறு விவசாயிகள் உள்ளனா். எனவே, மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுப்பதற்கு பதிலாக அந்தந்த பகுதியிலுள்ள கிராம நிா்வாக அலுவலா் அல்லது வேளாண் அலுவலரிடம் மனு கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: காலநிலை மாற்றமடைந்துள்ளதால் மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, ஜனவரி 28-ஆம் தேதி மூடுவதற்கு பதிலாக, மூடும் தேதியை குழு அமைத்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை உரிய காலத்தில் தொடங்கி தரமாக தூா் வார வேண்டும்.