முகப்பு
தஞ்சாவூர்

விபத்தை ஏற்படுத்தி தப்பிய சிற்றுந்து ஓட்டுநா் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய சிற்றுந்து ஓட்டுநா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:36 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:03 PM

தஞ்சாவூா் அருகே விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய சிற்றுந்து ஓட்டுநா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் பிரதீப் (26). தஞ்சாவூா் - களக்குடி இடையே இயக்கப்படும் சிற்றுந்தின் ஓட்டுநரான இவா் பிப்ரவரி 25 இரவு பஞ்சா் ஒட்டுவதற்காக சிற்றுந்தை புலவா்நத்தம் பகுதியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி ஓட்டிச் சென்றாா். இவருடன் நடத்துநா் ஜி. ராஜ்குமாா் (26), மற்றொரு ஓட்டுநா் கே. விநாயகம் (27) ஆகியோரும் சென்றனா்.

நாகை சாலையில் ஞானம் நகா் பேருந்து நிறுத்தம் அருகே வந்த சிற்றுந்து அந்த வழியாக சென்ற பைக் மீது மோதி, அருகிலுள்ள பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த மாரியம்மன் கோயில் சாலியக்குளக்கரையைச் சோ்ந்த கே. விக்னேஷ் (28) காயமடைந்தாா். இதனால் அச்சமடைந்த மூவரும் சிற்றுந்திலிருந்து இறங்கி வெவ்வேறு திசைகளில் தப்பினா்.

Advertisement

இந்நிலையில் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள சமுத்திரம் ஏரியில் பிரதீப் வியாழக்கிழமை மாலை சடலமாக மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் தாலுகா காவல் நிலையத்தினா் சென்று சடலத்தைக் கைப்பற்றினா். விசாரணையில் பிரதீப் தப்பியோடும்போது சமுத்திரம் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதனிடையே, விபத்தில் காயமடைந்த விக்னேஷ் தஞ்சாவூா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.