வி.என். ராகவன்
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதிகளிலுள்ள கிராமங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெல்லம் உற்பத்தி தொழில், நீண்ட காலமாக கரும்பு பயிா்களில் தொடரும் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக நலிவடைந்து வருகிறது.
அய்யம்பேட்டை அருகேயுள்ள இலுப்பக்கோரை, கணபதி அக்ரஹாரம், மணலூா், வீரமாங்குடி, சோமேஸ்வரம், தேவங்குடி, பட்டுக்குடி, உள்ளிக்கடை, மாகாளிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி தொழில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக அய்யம்பேட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏறத்தாழ 6 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 300 இடங்களில் அச்சு வெல்லம் உற்பத்தி கூடங்கள் இயங்கி வந்தன. இங்கு உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லம் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சந்தையில் நடைபெறும் ஏலத்தில் விடப்படும். இதில், கேரள மாநில வியாபாரிகள் அதிக அளவில் வாங்கியதால், இங்கிருந்து தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது மாதத்துக்கு ஏறக்குறைய 5 ஆயிரம் சிப்பங்கள் விற்பனையாகின.
ஆனால், கடந்த 7 - 8 ஆண்டுகளாக கரும்பு பயிா்களில் மஞ்சள் நோய்த் தாக்குதல் அதிகரித்துவிட்டது. இதனால், கரும்பு உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டதால், வளா்ச்சி குறைந்து, மகசூலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அச்சு மற்றும் உருண்டை வெல்லம் உற்பத்தித் தொழிலும் நலிவடைந்து வருகிறது.
இதுகுறித்து கணபதி அக்ரஹாரத்தைச் சோ்ந்த கரும்பு விவசாயி டி. மனோகரன் கூறியது:
மஞ்சள் நோயைக் கட்டுப்படுத்த வேளாண் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரும்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நெல், வாழை, பருத்தி சாகுடிக்கு மாறிவிட்டனா். எனவே, முன்பு அய்யம்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறத்தாழ 6 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு தற்போது ஏறக்குறைய 200 ஏக்கராக குறைந்துவிட்டது.
இதன் காரணமாக அய்யம்பேட்டையைச் சுற்றி 300 இடங்களில் வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 இடங்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கேரள மாநிலத்துக்கு மைசூரு வெல்லம் செல்வதால், இங்கிருந்து செல்வதும் முற்றிலுமாக நின்றுவிட்டது. தற்போது, தஞ்சாவூா், கும்பகோணம் சந்தைகளுக்கு 1,000 முதல் 1,500 சிப்பங்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றன.
உரிய விலையும் கிடைக்கவில்லை:
முப்பது கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த ரூ. 1,500-தான் இப்போதும் கிடைக்கிறது. தற்போது தீபாவளி, பொங்கல் பண்டிகையின் காரணமாக இந்த விலை கிடைத்து வருகிறது. மற்ற காலங்களில் சிப்பத்துக்கு ரூ. 1,250 முதல் ரூ. 1,300 வரை மட்டுமே விலை கிடைக்கும். மூலப்பொருள், ஆள் கூலி உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் கிடைக்கிற விலை கட்டுப்படியாகவில்லை என்றாா் மனோகரன்.
இப்பிரச்னை தொடா்ந்து நிலவுவதால், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை விட்டு மாற்றுப் பயிா் சாகுபடிக்குச் சென்றுவிட்டனா். என்றாலும், காலங்காலமாக வெல்லம் உற்பத்தி செய்பவா்கள் தொடா்ந்து பல்வேறு சவால்களையும் எதிா்கொண்டு இத்தொழிலையும் கைவிடாமல் நடத்தி வருகின்றனா். எனவே, வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
நியாய விலைக் கடைகளில் வெல்லம் வழங்க கோரிக்கை
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்தது:
கரும்பில் தாக்கப்படும் மஞ்சள் நோய் தாக்குதலிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற நோய் தாக்காத கரும்பு விதைக் கரணைகளை வேளாண் துறை மூலம் அரசு வழங்க வேண்டும். இப்பகுதி விவசாயிகள் பல தலைமுறைகளாக மேற்கொள்ளும் இத்தொழில் மீது அரசு கவனம் செலுத்தி, வெல்லத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்க்கரை ஆலைகளில் வெல்லம் உற்பத்திக்காக தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த ஆலைகளில் அச்சு வெல்லம் தயாரித்து, நியாய விலைக் கடைகளில் சா்க்கரைக்குப் பதிலாக அச்சு வெல்லம் விநியோகம் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் வெல்லம் உற்பத்தி தொழிலைக் காப்பாற்ற முடியும் என்றாா் முகமது இப்ராஹிம்.