தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு திருவிழாவான தைப்பொங்கலுக்கு பயன்படும் வெல்லம் உற்பத்தியில் மதுரையைச் சுற்றியுள்ள சிறிய கரும்பாலைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறித்த செய்தி.
இயற்கையோடு இணைந்து கொண்டாடும் தமிழர்களின் திருவிழாக்களில் தைப்பொங்கலுக்கு தனிச்சிறப்பு உண்டு.
மண்ணின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த திருவிழா போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பெரும் திருவிழாவாக உலகம் முழுவதும் தமிழர்களால் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்தம் புது மண் பானையில் பச்சரிசி, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், சுக்கு ஆகியவற்றோடு இனிப்புக்காக சேர்க்கப்படும் மண்ட வெல்லம் என்ற உருண்டை வெல்லம் போன்றவற்றின் சேர்மானத்தில் தயாராகும் தித்திக்கும் பொங்கலை ருசிக்க ஒரு தனி பட்டாளமே உண்டு
தமிழ்நாட்டில் மண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் என இரண்டு வகையான வெல்லங்கள் உள்ளன. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம் மண்டை வெல்லம் அதுவே அச்சுக்களில் ஊற்றி எடுக்கப்பட்ட வெல்லம் அச்சு வெல்லமாகிறது.
பொங்கலை இனிமையாக்கும் மண்ட வெல்லம் தயாரிப்பு மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு சிறு சிறு ஆலைகளில் விறுவிறுப்பாக நடக்கிறது.
வெல்ல உற்பத்தி ஆண்டு முழுவதும் நடந்தாலும், டிசம்பர், ஜனவரி, பொங்கல் பண்டிகைக் காலத்தில் வெல்லத்தின் உச்சத் தேவை அதிகரிக்கிறது. மக்கள் அறுவடை விழாவை சூரிய கடவுளுக்கு மட்டுமல்லாது, விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடுகிறார்கள்.
கொண்டையம்பட்டிக்குள் நுழையும்போதே கரும்பு சிறப்பின் இனிமையான மணம் காற்றில் பரவுகிறது. நம்மை வரவேற்கும் நறுமணம். வெல்லம் தயாரிக்க சிறிய ரக சரக்கு வாகனத்தில் வந்திறங்கிய தரமான சீனி கரும்பை அரைவை இயந்திரத்தின் மூலம் சக்கையாய் பிழிந்து கரும்புச்சாறை எடுத்து வடிகட்டி பின்னர் பாகு தயாரிக்கும் பிரம்மாண்டமான இரும்பு பாத்திரத்தில் ஊற்றி அதனை கொதிக்க வைக்கின்றனர்.
பாத்திரத்தின் கீழே உள்ள அடுப்பில் கொளுந்துவிட்டு எரியும் தீ, கரும்புச்சாற்றை பாகு போன்ற பதத்திற்கு மாறும் வரை விடாமல் பாத்திரம் சூடேற்றுகிறது. பிறகு பாகில் உள்ள கசடுகளை நீக்குவதற்கு மனிதர்களை பாதிக்காத சில வேதிப்பொருட்களை குறைந்து அளவில் பயன்படுத்தி, கசடுகள் நீக்குகின்றனர்.
கரும்புப் பாகு பதம் வந்ததும், அகண்ட இரும்பு பாத்திரத்தின் கீழே உள்ள மிகப்பெரிய மரக்கலனில் கொட்டப்படுகிறது.
சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு, பாகு பதம் மாறி கையில் உருண்டை பிடிக்கும் பக்குவம் வந்தபின் ஒரு கை பிடிக்கும் அளவு உருண்டையாக உருட்டுகின்றனர். உருட்டிய உருண்டைகள் அனைத்தும் சிறிது நேரத்தில் அலாதியான நறுமணத்துடன், மண்ட வெல்லமாக தயாராகி விடுகிறது. அவற்றை எடை போட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
எந்த கலப்படமும் இல்லாமல் முழுக்க முழுக்க கரும்பு சாறை மட்டும் பிழிந்து தயாரிப்பதால் பொங்கல் பண்டிகை சந்தைகளில் மதுரை கொண்டையம்பட்டி வெல்லத்திற்கு வரவேற்பு உண்டு.
அதுமட்டுமல்லாது இங்கிருந்து பெரும்பாலும் கேரளத்துக்கு அனுப்புகின்றனர். ஓணத்தின்போது கேரள மக்கள் வீடுகளில் பல்வேறு வகையான இனிப்பு வகைகளை செய்ய இங்கிருந்து செல்லும் வெல்லத்தை விரும்பி வாங்குகின்றனர்.
தற்போது இந்த உருண்டை வெல்லத்தை கேரள மக்கள் சர்க்கரைக்கு பதிலாக அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் கேரளத்தில் உருண்டை வெல்லத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
ஆலை உரிமையாளர் கிருபா கூறுகையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள எங்களது ஆலை எனது தாத்தா காலத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அழிந்து கொண்டிருக்கின்ற பாரம்பரிய தொழில்களில் கரும்பு ஆலைத் தொழிலும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த தொழில் சீசனுக்கு மட்டுமல்ல எப்போதும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அலங்காநல்லூர் ஒன்றியத்தில் மட்டும் 100 ஆலைகளுக்கு மேல் உள்ளன. சில பெரிய ஆலைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
எந்தவித வேதிப்பொருட்களும் கலக்கப்படாத தூய்மையான மண்ட வெல்லமாக நாங்கள் உருவாக்கி தருகிறோம். எங்களது உற்பத்தியில் பெருமளவு கேரளத்துக்கு தான் செல்கின்றன. கரும்பு உற்பத்திதான் பெரும் அளவு குறைந்துவிட்டது. ஆகையால் தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் தேவையை நிறைவேற்றித் தர வேண்டும்.
அதுமட்டுமன்றி இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய சலுகைகளை வழங்குவது அவசியம். அப்போதுதான் அழிந்து கொண்டிருக்கும் இந்த பாரம்பரிய தொழிலை காப்பாற்ற முடியும்.
தமிழக அரசு உங்களுக்காக ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கக்கூடிய பொருள்களில் மண்டை வெல்லமும் ஒன்று. அதனை எங்களிடம் பெற்று பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்' என்றார்.
அலங்காநல்லூர் ஒன்றியத்தில் மட்டும் இதுபோன்ற சிறு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சற்று ஏறக்குறைய 2500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் மண்டவெல்லங்கள் பெரும்பாலும் கேரள மாநிலத்திற்கு செல்கின்றன. அதிலும் குறிப்பாக ஓணம் பண்டிகையில் அதிக அளவு மண்ட வெல்லம் கேரளத்துக்கு செல்கிறது என்று கூறும் ஆலை உரிமையாளர்கள், பொங்கலுக்கு நாங்கள் எதிர்பார்க்கின்ற அளவு தமிழ்நாட்டில் விற்பனையாவதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ மண்ட வெல்லம் சராசரியாக ரூபாய் 60-க்கு முகவர்களால் விலை பேசி எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கரும்பாலையில் பணியாற்றும் கல்வேலிப்பட்டியைச் சேர்ந்த இந்திரா கூறுகையில், இந்த பகுதியை பொருத்தவரை இந்தக் கரும்பு ஆலைகள் தான் எங்களுக்கான ஒரே வாழ்வாதாரம். இவற்றை விட்டால் எங்களுக்கு வேறு வேலை இல்லை.
இதை நம்பி வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு எந்தவித பயனும் இல்லை. அதிகமான வெப்பத்தில் வேலை பார்த்தாக வேண்டும். ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால்கூட மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் அருகில் எந்தவிதமான மருத்துவமனைகள் இல்லை.
குடிசைத் தொழில் என்பதை தவிர இச்சிறிய கரும்பு ஆலைகளுக்கு எந்த விதமான சலுகையோ மானியமோ தமிழக அரசால் வழங்கப்படவில்லை. மருத்துவம் காப்பீடு உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு உரிய வசதி வாய்ப்புகளை இந்த தொழிலை நம்பி வாழும் பணியாளர்களுக்கும் அரசு வழங்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.