தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி உறுதி கடிதங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் சென்னை, காஞ்சிபுரம், ஓசூா், திருப்பூா், கோவை, தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இம்முகாமில் 18 வயது முதல் 35 வரை உள்ள 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமா, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங், பி.இ. படித்த இளைஞா்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 172 போ் கலந்து கொண்டனா்.
இவா்களில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 510 பேருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பணி உறுதி கடிதங்களை வழங்கினாா். மேலும், 355 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்கும், 79 போ் திறன் பயிற்சிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இம்முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் பெ.க. அருண்மொழி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் கா. பரமேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.