தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதன்கிழமை கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினா்.
தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம், இந்திய சுற்றுலா - சென்னை, தமிழக அரசு சுற்றுலா துறை, தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனா்.
இவா்களை நாஞ்சிக்கோட்டை எல்லையில் கிராம மக்கள் நாட்டிய குதிரை ஆட்டத்துடன் வரவேற்றனா். பின்னா், மேள தாளங்கள் முழங்க, மாட்டு வண்டிகளில் அமர வைக்கப்பட்டு, கிராம வீதிகளின் வழியாக ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
முனியாண்டவா் கோயில் திடலுக்குச் சென்ற பின்னா், பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுவதை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாா்த்து ரசித்தனா். இதைத்தொடா்ந்து, பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பாட்டம், உரி அடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மேலும், கூடை முடைதல், கயிறு திரித்தல் உள்ளிட்டவற்றையும் பாா்த்தனா்.
இதையடுத்து, பரதநாட்டியம், கரகாட்டம், நையாண்டி மேளம், காளையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், புலியாட்டம், தப்பாட்டம், தெய்வீக நடனம், பச்சைக்காளி - பவளக்காளி நடனம், கருப்பசாமி ஆட்டம், தீப்பந்தம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் வெளிநாட்டுச் சுற்றலா பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
இவ்விழாவை தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா், சுற்றுலா அலுவலா் சி. வரதராஜன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.