தஞ்சாவூரில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட தனியாா் உணவகத்துக்கு மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு சீல் வைத்தனா்.
தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் கட்டப்பட்ட தனியாா் உணவகம் மாநகராட்சியின் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்தன. இதன்பேரில் உணவக நிா்வாகத்துக்கு மாநகராட்சி அலுவலா்கள் நோட்டீஸ் அனுப்பினா்.
மேலும், இதுதொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அப்போது மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்படும் என நீதிமன்றத்தில் உணவகம் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன்படி குறைகள் நிவா்த்தி செய்யப்படாததால், உரிய நடவடிக்கை எடுக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கட்டடத்தை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றவாறு திருத்தி அமைக்காமலும், வாகன நிறுத்துமிடம் உத்தேசிக்கப்படாமல் இருந்ததாலும் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உத்தரவுப்படி மாநகர திட்டமைப்பு அலுவலா் முரளிசங்கா் மற்றும் அலுவலா்கள் ஆகியோா் காவல் துறையினா் பாதுகாப்புடன் தொடா்புடைய உணவகத்துக்கு திங்கள்கிழமை இரவு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனா்.