கும்பகோணத்தில் புதன்கிழமை (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலரும், மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவருமான ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: கும்பகோணம் தாராசுரம் புறவழிச்சாலை மைதானத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தலைமை வகிக்கிறாா்.
மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவுறையாற்றுகிறாா். மாநாட்டில் வெளிநாடு, மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீக்கின் 52 மாவட்ட நிா்வாகிகள், மாணவா், மகளிா், அயலக தமிழா், காயிதே மில்லத் பேரவை நிா்வாகிகள், உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத் நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.
மேலும், மாநாட்டில் முதல்வரிடம் முஸ்லிம் மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பல ஆண்டுகளாக பட்டா இல்லாத பள்ளிவாசல்களுக்கு பட்டா வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.